கொத்தனார் வேலைக்கு சென்ற என்ஜினீயர் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு


கொத்தனார் வேலைக்கு சென்ற என்ஜினீயர் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 8:24 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் கொத்தனார் வேலைக்கு சென்ற என்ஜினீயர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

குழித்துறை,

திருவட்டார் அருகே காட்டாத்துறை பருத்திபாறவிளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அனீஷ்குமார் (வயது 25). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு, வேலைக்கு முயன்றார்.

ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் படித்த படிப்புக்குரிய வேலை கிடைக்கவில்லை. இவருக்கு அக்கா ஒருவர் உள்ளார். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனீஷ்குமார் சுவாமியார் மடம் அருகே தெற்றை பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரிடம், கொத்தனாராக வேலை செய்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மார்த்தாண்டம் பஸ் நிலையப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அனீஷ்குமார் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து அனீஷ்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை அனீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story