கொடைக்கானல் மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு தடை: நடுவழியில் நிற்கும் லாரிகளால் காய்கறிகள் அழுகும் அவலம் - விவசாயிகள் கவலை
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி ஏற்றி வந்த லாரிகள் நடுவழியில் நிற்கின்றன. காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விளைகின்றன. இவை தினமும் அடிவாரத்தில் உள்ள நகரங்களுக்கு தினசரி கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானலில் பெருத்த சேதம் ஏற்பட்டது.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டுமே தற்போது சென்று வருகின்றன. மேலும் மலைப்பாதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 15-க்கும் மேற்பட்ட லாரிகள், காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோவை, திருச்சி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டன. ஆனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பெருமாள் மலைப்பகுதியில் நடுவழியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காய்கறிகளை உரிய நேரத்தில் கொண்டு செல்லாவிட்டால் அவை அழுகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் காய்கறி ஏற்றி வந்த லாரிகளை செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ‘லாரிகளில் காய்கறிகள் ஏற்றப்பட்டுள்ளதால் அவை அழுகி விடும் சூழல் உள்ளது. எனவே காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்து விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story