வாலிபர் கொலை வழக்கு: மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு


வாலிபர் கொலை வழக்கு: மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28). கெங்குவார்பட்டி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பவிஷா(6) என்ற மகளும், ரிஷிகேசன்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ரமேஷ் மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு பெரியகுளம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ரமேஷ் கடந்த 11.7.2016-ந்தேதி பெரியகுளம் கோர்ட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் பஞ்சவர்ணம், அவரது தாய் பெருமாயி(62), சகோதரர்கள் அறிவுராஜா(27), ரஞ்சித்குமார்(25) ஆகிய 4 பேரும் ரமேசிடம் பிள்ளைகளின் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு ரமேஷ் மறுத்தார். அப்போது ஆத்திரமடைந்த அறிவுராஜா, ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் ரமேசை கத்தியால் குத்தியுள்ளனர். இதற்கு பஞ்சவர்ணம், பெருமாயி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதில் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பஞ்சவர்ணம் உள்பட 4 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் களை கைது செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலகம் குற்றம் சாட்டப்பட்ட பஞ்சவர்ணம் உள்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story