கொலைக்கு பழி தீர்க்க கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த பெண் உள்பட 2 பேர் கைது


கொலைக்கு பழி தீர்க்க கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 3:45 AM IST (Updated: 20 Nov 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

பெண் கொலைக்கு பழி தீர்க்க கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வீரம்பல் பகுதியை சேர்ந்த வேதமுத்து என்பவருடைய மகன் ராஜ்குமார் (வயது50). இவருடைய மனைவி அன்னாள்(வயது43). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 23–ந் தேதி முதுகுளத்தூரில் நகையை அடகு வைக்க சென்று வீடு திரும்பவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த தமிழ்செல்வம்(46) என்பவர் அன்னாளை கொலை செய்ததாக முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அப்போது அவர், அன்னாளுக்கும் தனக்கும் பணம் கொடுக்கல்–வாங்கல் இருந்து வந்தது. வெளிநாடு சென்று திரும்பியதும் பணம் தருமாறு கேட்டேன். இதற்காக வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை அடகு வைத்த பணம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது முதுகுளத்தூர் அருகே கருவேலமர காட்டுக்குள் வைத்து பணத்தை பறித்து கொண்டு அன்னாளை கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறியுள்ளார். இதன்பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்செல்வம் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக வர இருந்தார். இதுபற்றி அறிந்த அன்னாளின் கணவர் ராஜ்குமார், இறந்த அன்னாளின் அக்காள் பொண்ணுராணி(50) ஆகியோர் தமிழ்செல்வத்தை பழி தீர்க்க முடிவு செய்தனர். இதன்படி ராமநாதபுரம் கோர்ட்டுக்கு கையெழுத்திட வரும் தமிழ்செல்வத்தை கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட இருவரும் வந்துள்ளனர்.

இதுபற்றி ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைஅரசன் தலைமையில் போலீசார் கோர்ட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கோர்ட்டுக்குள் வந்த ராஜ்குமார், பொண்ணுராணி ஆகியோரை துருவி துருவி சோதனையிட்டனர்.

அப்போது பொண்ணுராணி வைத்திருந்த கூடையில் கூர்மையான அரிவாள் துண்டால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அரிவாளை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழிக்குபழி வாங்குவதற்காக கோர்ட்டுக்கு அரிவாளுடன் 2 பேர் வந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story