பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தியில் பூச்சி தாக்குதல் கள ஆய்வு நடத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு


பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தியில் பூச்சி தாக்குதல் கள ஆய்வு நடத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் தாலுகா அய்யலூர் குடிக்காடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி ஆகியவை பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு கள ஆய்வு நடத்த அதிகாரிகள் வர வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது தமிழ்நாடு செவிலியர் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ்ராஜா தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக மாநில அரசு அங்கீகாரம் அல்லாத தனியார் பாரா மெடிக்கல் பயிற்சி பள்ளியில் செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்து தற்போது வேலை ஏதும் இல்லாமல் இருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் குடும்ப சூழ்நிலையை கருதி ஏதாவது அரசு வேலையை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா அயிலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யலூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் தங்களது விளைநிலத்தில் மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களை அதிகப்படியான அளவுக்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது போதிய அளவு மழை பெய்யாததாலும், வெப்பத்தின் காரணத்தினாலும் சாகுடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் சரியான முறையில் வளர்ச்சி அடையவில்லை. மேலும் பயிர்கள் பூச்சிகள் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். எனவே பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பலனை விவசாயிகள் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரியின் காப்பீடு திட்ட நிறுவனத்தின் கள அலுவலர் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் எங்கள் விளைநிலத்திற்கு வந்து கள ஆய்வு நடத்த மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 254 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். பின்னர் கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில் குன்னம் தாலுகா ஒகளூர் கிராமத்தை சேர்ந்த தண்டாயுத பாணி மகன் சக்தி(வயது 12) மற்றும் மகாராஜன் மகன் சந்தோஷ்(11) ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பெரியகுளத்தில் குளிக்கும்போது சேற்றில் சிக்கி இறந்து போனதால், முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை இறந்துபோன 2 சிறுவர்களின் குடும்பத்திற்கும் கலெக்டர் சாந்தா வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மகளிர் திட்ட அதிகாரி தேவநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story