குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க கலெக்டரிடம் இளைஞர்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க கலெக்டரிடம் இளைஞர்கள் மனு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். இதில் மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட அதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குளித்தலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், குளித்தலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 24 ஆண்டுகள் ஆகி உள்ளது. மேலும் இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய அளவிலான பஸ் நிலையத்தில் போதிய பஸ்களை நிறுத்த முடிவதில்லை. மேலும் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே குளித்தலையில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும். இல்லாவிடில் குளித்தலையை ஊராட்சியாக மாற்றம் செய்துவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் தாந்தோன்றிமலை அருகே உள்ள ஏமூர் ஊராட்சி கொங்குநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய பழுதடைந்த குடிநீர்தொட்டிகளை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து கரூருக்கு கூடுதலாக பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். எங்கள் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே அந்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

கரூர் அருகே புலியூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சில நபர்கள் குடிபோதையில் தனியாக செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடக்கின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை ஒதுக்குப்புறமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

கஜா புயலின் சீற்றத்தால் 1,000 வாழைகள் சேதமடைந்துவிட்டதாகவும், அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் குளித்தலை கழுகூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரெத்தினம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

Next Story