நிவாரண பணிக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டம்


நிவாரண பணிக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:30 AM IST (Updated: 20 Nov 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண பணிக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நேற்று மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது 3 வேளையும் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை கடுமையாக தாக்கியதில் பொதுமக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை என கூறி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று தீவிரம் அடைந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தில் தோட்டங்கள், வயல்கள், வீடுகளில் ஏற்பட்ட சேதங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களுக்கு எந்தவித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் விளக்குடி கடைவீதியில் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் இரவு வரை நீடித்தது.

மறியலின்போது புயலில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை சாலையின் குறுக்கே போட்டு வைத்து இருந்தனர். மறியல் காரணமாக மன்னார்குடி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் மேட்டுப்பாளையம் மேலத்தெரு, கீழத்தெரு, ராயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் புயலில் குடிசை வீடுகளை இழந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் மயிலை அம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய கூடத்திலும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை அதிகாரிகள் சந்தித்து உதவி செய்யவில்லை என கூறி நேற்று மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் இரவு வரை நீடித்தது. பல மணி நேரம் நடந்த இந்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் சாலையிலேயே 3 வேளையும் சமைத்து சாப்பிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் அனைத்து வீடுகளும் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால் இதுவரை அதிகாரிகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு வரவில்லை.

எங்கள் பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதியில் மணலி, வேலூர், கொக்கலாடி, நெடும்பலம், அண்ணாநகர், தோப்புதெரு, பள்ளிவாசல்தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரொக்ககுத்தகை உள்ளிட்ட 15 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

புதிய பஸ்நிலையம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, காமராஜ் ஆகியோர் சந்தித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மன்னார்குடி அருகே உள்ள முக்குளம், சாத்தனூர், கருவாகுறிச்சி, காஞ்சிகுடிகாடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று 5-வது நாளாக மின் வினியோகம் இல்லை.

இந்த கிராமங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி காட்சி பொருளாக மாறி விட்டன. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் கேட்டு நேற்று பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி காளவாய்கரையில் நேற்று அப்பகுதி கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மின் வினியோகம் செய்ய வேண்டும். நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீரை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மன்னார்குடி-தஞ்சை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மன்னார்குடி அருகே உள்ள வடபாதி, பரவாக்கோட்டை, சம்மட்டிகுடிகாடு உள்ளிட்ட கிராமங்களிலும் நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் குடிநீர், உணவு வினியோகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மறியல் காரணமாக மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை, மன்னார்குடி-மதுக்கூர் சாலை, மன்னார்குடி-வடசேரி ஆகிய சாலைகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 5 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக குடிநீருக்காகவும், குளிக்கவும் தண்ணீரின்றி பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குடிநீா தட்டுப்பாடு ஏற்பட்டு தான் உள்ளது.

இந்த நிலையில் குடிநீர் கேட்டு நீடாமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் நேற்று காலை காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள கானூர் பருத்திக்கோட்டை கிராமமக்கள் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் புதுரோடு என்ற இடத்தில் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story