கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4100 நிவாரணம் - நாராயணசாமி அறிவிப்பு


கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4100 நிவாரணம் - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:30 PM GMT (Updated: 20 Nov 2018 7:05 PM GMT)

கஜா புயலால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, புதுவை மற்றும் காரைக்காலில் தீவிரமடையும் மழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, முதல்–அமைச்சரின் செயலாளர் பார்த்திபன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரைக்காலில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தபோது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் படகுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காற்றின் வேகத்தினால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

குடிசை வீடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய கூலி தொழிலாளர்கள் கடும் புயல் மழை வெள்ளத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லை. நானும், அமைச்சர்களும் புயல் அடித்த 6 மணி நேரத்துக்குள் காரைக்காலுக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களிடம் குறையை கேட்டோம். காரைக்கால் மாவட்ட கலெக்டர் சேதத்தை கணக்கிட்டு அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்டோம். அவரும் அறிக்கையை தயார் செய்து கொடுத்துள்ளார். அமைச்சர் கமலக்கண்ணன் அங்கு நிவாரண பணிகளை செய்து வருகிறார்.

இதனிடையே மத்திய அரசுக்கு இடைக்கால அறிக்கை தயார் செய்து நாளை(இன்று) அனுப்ப உள்ளோம். வருகிற 22–ந் தேதி பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். மத்திய அரசு முதலில் புதுவைக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய குழுவை அனுப்பி சேதத்தை கணக்கிட்டு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்க நேரம் கேட்டுள்ளேன். புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாததையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கு நிவாரணமாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் காரைக்காலில் மொத்தம் 9,500 குடிசை வீடுகள் உள்ளன. குடிசை வீடுகளில் வசித்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே குடிசை வீடுகளில் வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 1100 குடிசைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு குடிசைக்கு ரூ.4,100 நிதி வழங்கப்படும். மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.64 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிப்பை கணக்கிட்டு பேரிடர் மீட்பு துறையின் விதிமுறைகள்படி அவர்களுக்கு பணம் வழங்கப்படும்.

இந்த புயலில் மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்களின் படகுகளை பொருத்தவரை பாதிப்புகளை கணக்கிட்டு கொடுக்கப்பட்ட அறிக்கையின்படி அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் குறைதீர்க்கும் அமைப்பின் மூலமாக ரூ.10 கோடி இங்கிருந்து அனுப்பப்படும்.

அதில் இருந்து நிவாரணத்துக்கான தொகை முழுவதும் கொடுப்பதற்கான நடவடிக்கையை அவர் எடுப்பார். வெகு விரைவில் அந்த நிதியை மக்களுக்கு கொடுத்து இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கூறியுள்ளோம். மிக விரைவில் அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். காரைக்காலுக்கு புயல் பாதிப்புக்கு முழு நிவாரண நிதியாக ரூ.187 கோடி கேட்டுள்ளோம்.

அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள் பாதிப்பு, சாலைகளில் மரங்கள் சாய்ந்தது சம்பந்தமாக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 99 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்பவர்கள் தாராளமாக முன்வந்து நிவாரண உதவிகள் வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story