புயல் பாதிப்புக்கு உதவுவதில் பா.ஜ.க. அரசு பாரபட்சம் - சஞ்சய்தத் குற்றச்சாட்டு


புயல் பாதிப்புக்கு உதவுவதில் பா.ஜ.க. அரசு பாரபட்சம் - சஞ்சய்தத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-21T00:35:35+05:30)

புயல் பாதிப்புக்கு உதவுவதில் பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர் சஞ்சய்தத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரைக்கால்,

கஜா புயலால் காரைக்கால் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில மேலிடப்பார்வையாளர் சஞ்சய்தத் நேற்று காரைக்காலுக்கு வந்தார்.

அவர் கொட்டும் மழையில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, திரு-பட்டினம், பட்டினச்சேரி, காரைக்கால் அரசலாறு ஆகிய பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட மீனவர்கள், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் திருநள்ளாறு தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

புயல் பாதிப்பு குறித்து சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கடலோரத்தைபோல், காரைக்காலையும் கஜா புயல் மிகவும் கடுமையாக தாக்கியுள்ளது. புயல் வீசிய அடுத்த நாளே புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் காரைக்கால் வந்து, பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால், தற்போது 5 நாட்களாகியும் மாநில கவர்னர் கிரண்பெடி மற்றும் மத்திய மந்திரிகள் இங்கு வரவில்லை. இது கண்டனத்திற்குரியது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, பேரிடர் காலங்களில் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவி செய்தது. ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், மத்திய பா.ஜ.க. அரசு நிவாரண உதவி வழங்க பாரபட்சம் காட்டுகிறது. மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் கிரண்பெடி, புயல் பாதிப்பை நன்கு அறிந்தும், உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறு பாதிப்புக்கான ஆதாரத்தை தருமாறு கேட்பது வேதனை அளிக்கிறது.

சாதாரண நாட்களில் மாநிலத்தின் அனைத்து பகுதியையும் ஆய்வு மேற்கொள்ளும் கவர்னர், புயல் பாதித்த காரைக்காலை ஆய்வு செய்வதில் அரசியல் பாகுபாடு பார்ப்பது ஏன் என தெரியவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் அரசை திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் கவர்னரும், மத்திய அரசும் ஈடுபட்டு வருவதையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story