வைகை அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு


வைகை அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:45 AM IST (Updated: 21 Nov 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை, 1958-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்பணிக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக வைகை அணை திகழ்கிறது.

கடந்த 60 ஆண்டு காலமாக அணையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், வளர்ச்சி பணிகளுக்காகவும் பல கோடி ரூபாய் நிதியை உலக வங்கி வழங்கியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளும் நிதி வழங்கி வருகிறது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளில் அணையின் கரையை பலப்படுத்துதல், தண்ணீர் வழிந்தோடும் வாய்க்கால் சீரமைத்தல், தார்சாலைகள் அமைத்தல், ஷட்டர்களை பழுது நீக்கம் செய்தல், பூங்கா மேம்பாடு ஆகியவற்றுக்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அணையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முறையாக நடந்துள்ளதா?, அணையின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதற்காக மத்திய நீர்வள ஆணையத்தலைவர் மாத்தூர், அணை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட இயக்குனர் பிரமோத் நாராயணன் ஆகியோர் தலைமையிலான 70 பேர் கொண்ட குழுவினர் வைகை அணைக்கு வந்தனர்.

இதில் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், சென்னை ஐ.ஐ.டி. தொழில் நுட்ப வல்லுனர்கள், மத்திய அணைகள் பாதுகாப்பு குழுவினர், உலக வங்கி அதிகாரிகள், கேரள மாநில அணைகள் பாதுகாப்பு மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். அணையின் மேல் தளப்பகுதி, பெரிய மதகுகளின் செயல்பாடு, தண்ணீர் வெளியேறும் பகுதியின் அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அணையின் சுரங்கப்பாதைக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு நீர்கசிவு குறித்து ஆய்வு செய்தனர். மின்சார உற்பத்தி செய்யும் பகுதி, பிக்அப் அணை ஆகியவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது 7 மதகுகள் வழியாக தனித்தனியாக தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, ஒரே இடத்தில் 7 மதகுகளையும் திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஒரே சமயத்தில் கூடுதல் தண்ணீரை திறக்காமல், படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மாத்தூர் கூறும்போது, உலக வங்கி மூலம் பெறப்படுகிற நிதியில் இருந்து 7 மாநிலங்களில் உள்ள 200 அணைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அணையில் உள்ள தொழில் நுட்ப பிரச்சினைகள் குறித்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக வைகை அணையில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்துள்ளோம். வைகை அணையில் பராமரிப்பு மற்றும் செயல்பாடு நன்றாக உள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் நடராசன், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story