வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 21 Nov 2018 5:45 AM IST (Updated: 21 Nov 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு, பனைமரத்தொட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (வயது 26). இவருக்கும், ஜீவரெத்தினம் நகர் ஏ.பிளாக்கை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பார்த்தசாரதி என்கிற சரவணன்(35) என்பவருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சரவணன் ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார்.

திருமணத்தின்போது 7 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுக்கப்பட்டது. ஆனால் திருமணம் ஆனது முதல் மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி சரவணன் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயை துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

இதனையடுத்து ஜெயஸ்ரீ மனஉளைச்சல் காரணமாக தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி அதே பகுதியில் தனிக்குடித்தனம் வைத்தனர். அப்போது பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜெயஸ்ரீ தன்னுடைய சாவுக்கு கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

இதற்கிடையே ஜெயஸ்ரீக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதாக நேற்று முன்தினம் தனது தந்தையிடம் கூறினார். அவர் மகள் வீட்டிற்கு சென்று தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதற்கு ஜெயஸ்ரீ சில பிரச்சினைகள் இருக்கிறது, அதனை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி தந்தையை அனுப்பிவிட்டார்.

வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் ஜெயஸ்ரீயுடன் செல்போனில் பேச முயன்றார். அப்போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சரவணனுடன் பேசியபோது, உங்கள் மகள் கதவை பூட்டிக்கொண்டு திறக்கமாட்டேன் என்கிறாள் என்று கூறினார்.

இதனால் பதறிப்போன ஜெகநாதன் மகள் வீட்டுக்கு விரைந்து சென்று கதவை திறந்து பார்த்தபோது மின் விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் ஜெயஸ்ரீ பிணமாக கிடந்தார். அருகில் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. உடனே அவரது உடலை கீழே இறக்கி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காசிமேடு போலீசார் ஜெயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜெயஸ்ரீ இறந்துபோன தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் காசிமேடு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எனது மகளின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுகின்றனர். எனது மகள் உடலில் காயங்கள் உள்ளன. எனவே எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயஸ்ரீயின் தந்தை ஜெகநாதன் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் வழக்கு பதிவு செய்து ஜெயஸ்ரீயின் கணவர் சரவணன், மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் பத்மினி ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 வருடமே ஆவதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story