அம்பை அருகே தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
அம்பை அருகே தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை,
அம்பை அருகே தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அடித்துக் கொலை
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கீழ ஆம்பூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி ஈசுவரி (வயது 73). இவருக்கு முதல் கணவர் தங்கமுத்து மூலம் ஈசுவரன் (53) என்ற மகனும், 2-வது கணவர் சுப்பையா மூலம் முருகன் (45) என்ற ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இதில் கூலித்தொழிலாளியான முருகன் குடிப்பழக்கத்தால் தன்னுடைய மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். அப்போது ஈசுவரி ரூ.50 ஆயிரம் சேமித்து வைத்து, கொடுக்கல்-வாங்கல் செய்து வந்தார். இதைக்கண்ட முருகன் அந்த பணத்தை தனக்கு செலவுக்கு தருமாறு கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ஈசுவரி அந்த பணத்தை தரமுடியாது என்று மறுத்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி தாயிடம் தகராறில் ஈடுபட்ட முருகன் கட்டையால் ஈசுவரியை அடித்துக் கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
பின்னர் முருகன் தன்னுடைய தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகம் ஆடினார். ஆனால் ஈசுவரியின் மூத்த மகன் ஈசுவரன், தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தியதில் முருகன் தனது தாயை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story