காதலி இறந்த துக்கம் தாங்காமல் சினிமா உதவி இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலி இறந்த துக்கம் தாங்காமல் சினிமா உதவி இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Nov 2018 12:00 AM GMT (Updated: 20 Nov 2018 7:21 PM GMT)

விருகம்பாக்கத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் சினிமா உதவி இயக்குனர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

விருகம்பாக்கம், யாதவாள் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50), பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் மணி (23), பிரபல சினிமா இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் மணி, மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் மனோகரன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது, நீண்டநேரமாக கதவை தட்டியும் மணி திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மனோகரன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டிப்ளமோ படித்துள்ள மணி, சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

மேலும் வீட்டில் சோதனை செய்தபோது மணி இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது கிடைத்தது அதில் “நீ இல்லாத உலகில் என்னால் வாழ முடியவில்லை” என்று எழுதியிருந்தார். மணி அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

அதில் இருந்து மணி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். எனவே காதலி இறந்த துக்கம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story