சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயல் தாக்குதல்; தொடர்ந்து 5–வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயல் தாக்குதல்; தொடர்ந்து 5–வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 4:30 AM IST (Updated: 21 Nov 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயல் தாக்குதலால் தொடர்ந்து 5–வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு இல்லாததால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

காரைக்குடி,

தமிழகத்தின் தென் மாவட்டத்தில் கடந்த 16–ந்தேதி ஏற்பட்ட கஜா புயலால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தும், விவசாயம் கடுமையான பாதிப்பும் ஏற்பட்டது. இந்த புயல் நாகப்பட்டணம், வேதாரண்யம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கஜா புயலால் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியும், தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் புயலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

இது தவிர நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வீடுகள் இந்த புயலால் கடும் சேதமடைந்தன. தற்போது இந்த புயல் பாதித்த இடங்களில் மீட்பு குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காரைக்குடி டவுன் பகுதியில் இந்த பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்று மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்துகொடுத்தனர்.

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தமங்கலம், வ.சூரக்குடி, பலவான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஒரு சில இடங்களில் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சில இடங்களில் தொடர்ந்து 5 நாட்களாகியும் மின் இணைப்பு கிடைக்காததால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதையொட்டி இந்த கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து சின்டெக்ஸ் தொட்டிக்கு வாடகை ஜெனரேட்டர் எந்திரம் மூலம் மக்கள் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

இதையடுத்து காரைக்குடி சுற்று வட்டார கிராமப்புறங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக அளவு ஜெனரேட்டர்கள் தேவைப்படுவதால் காரைக்குடி பகுதியில் உள்ள கடைகளில் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த ஜெனரேட்டர் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர இந்த புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்கு ஜெனரேட்டர் எந்திரத்தை வாங்கி அதைக்கொண்டு நீரேற்றும் அறை, நீர் நிலைத்தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீரை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெற்பயிர்கள், துவரை, வாழை, தென்னை, சவுக்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலைடையந்துள்ளனர்.


Next Story