தஞ்சை மாவட்டத்தில் சீரமைப்பு பணிக்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 5 கிரேன் எந்திரம் அனுப்பி வைப்பு


தஞ்சை மாவட்டத்தில் சீரமைப்பு பணிக்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 5 கிரேன் எந்திரம் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:15 PM GMT (Updated: 20 Nov 2018 7:24 PM GMT)

கஜா புயல் பாதித்த தஞ்சை மாவட்டத்தில் சீரமைப்பு பணிக்காக நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 5 கிரேன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி, 

கஜா புயல் பாதித்த தஞ்சை மாவட்டத்தில் சீரமைப்பு பணிக்காக நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 5 கிரேன் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கிரேன் எந்திரங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வ.உ.சி. துறைமுகம் சார்பில் கிரேன் எந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் கருவிகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தூத்துக்குடி துறைமுகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 5 கிரேன் எந்திரங்கள் மற்றும் 10 மரம் வெட்டும் கருவிகளை கஜாபுயலால் பாதிக்கப்பட்டு உள்ள தஞ்சை மாவட்டத்தில் மீட்பு பணிக்காக கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேகரிப்பு மையம்

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கஜா புயலின் தாக்கத்தால் ஏராளமான மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. மின்தடை ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வேண்டுகோள்

அதே நேரத்தில் வ.உ.சி. துறைமுகம் சார்பில் சீரமைப்பு பணிகளுக்காக 5 கிரேன் எந்திரங்கள் மற்றும் 10 மரம் வெட்டும் கருவிகள் தேவையான பணியாளர்களுடன் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிரேன் எந்திரங்கள், மரம் வெட்டும் எந்திரங்கள் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மருந்துகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவிட பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கூறினார்.

ரூ.3.20 கோடி பொருட்கள்

வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி நிருபர்களிடம் கூறியதாவது:-

வ.உ.சி. துறைமுகம் சார்பில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் 5 கிரேன் எந்திரங்கள் மற்றும் 10 மரம் வெட்டும் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், 30 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 12 வகையான அத்தியாவசிய பொருட்கள் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக செயலாளர் ஜிசுராய், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், தலைமை எந்திர பொறியாளர் சுரேஷ்பாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story