பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் திடீர் பழுது 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் திடீரென்று பழுதானதால், அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை,
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் திடீரென்று பழுதானதால், அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கேட் பழுது
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் பயணிகள் ரெயில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது. ரெயிலுக்காக பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் மாலை 4.15 மணி அளவில் அடைக்கப்பட்டது. ரெயில் கடந்து சென்ற பின்னர், ரெயில்வே ஊழியர் கேட்டை திறக்க முயன்றார்.
கேட் திடீரென்று பழுதானதால், அதை திறக்க முடியவில்லை. உடனே அவர் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தொழில்நுட்ப ஊழியர்கள் வந்து கேட்டை திறந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மத்திய சிறை அருகே நிறுத்தி வைக்கப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டதும், அந்த வழியாக வந்த மாணவ-மாணவிகளும் சிரமப்பட்டனர். 5.15 மணிக்கு கேட் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேட் திறந்தவுடன் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story