ஆர்.எஸ்.மங்கலத்தில் பெற்றோரை வீட்டுக்குள் அனுமதிக்காத மகன் கைது
ஆர்.எஸ்.மங்கலத்தில் பெற்றோரை வீட்டுக்குள் அனுமதிக்காத மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பரம்பை ரோட்டை சேர்ந்தவர் அமீர் மைதீன். இவரது மனைவி சீனி செய்யது (வயது 74). இவர்களுக்கு 6 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மலேசியா நாட்டில் வாழ்ந்த அமீர் மைதீனும், அவரது மனைவி சீனி செய்யதுவும் முதுமையின் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான ஆர்.எஸ்.மங்கலத்துக்கு வந்து வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது சொத்துகளை அனைத்து பிள்ளைகளுக்கும் இனாம் கிரைய பத்திரம் மூலம் எழுதிக்கொடுத்து விட்டனராம். இவர்கள் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தை அசரப் அலி என்ற மகனுக்கும், மேல் தளத்தை அன்வர்தீன் என்ற மகனுக்கும் எழுதிக்கொடுத்துள்ளனர்.
வீட்டின் முன்புறம் உள்ள ஒரு அறையில் அமீன் மைதீன் தனது மனைவியுடன் தங்கியுள்ளார். அங்கு கழிப்பறை வசதி இல்லாததால் அங்குள்ள காலி இடத்தில் கழிப்பறை கட்டித்தருமாறு அரசப் அலியிடம் கேட்டுள்ளனர். அதற்கு சம்மதிக்காத அவர் கொல்லைப்புறத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துமாறு கூறினாராம். இதனால் மனமுடைந்த அமீர் மைதீன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த இனாம் கிரைய பத்திரத்தை ரத்துட செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அதன்படி கலெக்டரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அசரப் அலி தனது பெற்றோரை கீழ்தளத்தில் உள்ள அறைக்கு வரக்கூடாது என்று கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது சீனி செய்யது மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். அதனை தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் அதிகாரிகள் ஆர்.எஸ்.மங்கலத்துக்கு வந்து விசாரணை நடத்தி, அசரப் அலி தனது பெற்றோர்களை துன்புறுத்தியது உண்மைதான் என்றும், அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ்குமார் ஆலோசனையின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அரசப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.