பேட்டையில் பரிதாபம் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


பேட்டையில் பரிதாபம் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 20 Nov 2018 9:45 PM GMT (Updated: 20 Nov 2018 7:49 PM GMT)

பேட்டையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக பலியானார்.

பேட்டை, 

பேட்டையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக பலியானார்.

டிரைவர்

சேரன்மாதேவி அருகே உள்ள புலவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் தினமும் நெல்லை டவுன் நயினார்குளத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு வந்து தனது ஆட்டோவில் காய்கறி மூட்டைகளை ஏற்றிச் செல்வார். நேற்று அதிகாலை வழக்கம் போல் நடராஜன் தனது ஆட்டோவில் நெல்லைக்கு புறப்பட்டார். பேட்டையை கடந்து சுடலைமாட சுவாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

ஆட்டோ கவிழ்ந்து பலி

அப்போது ஆட்டோ திடீரென்று தாறுமாறாக ஓடி அருகில் உள்ள குளத்துக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் நடராஜன் ஆட்டோவுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஆட்டோவை தூக்கி நிறுத்தி, நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

சாலை குண்டும்-குழியுமாக உள்ளதே விபத்துக்கு காரணம் என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விபத்து நடந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டி மூடப்பட்டு உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story