பெரம்பலூர், அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர், தலைமை கொறடா வழங்கினர்


பெரம்பலூர், அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர், தலைமை கொறடா வழங்கினர்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:15 AM IST (Updated: 21 Nov 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூரில் பயனாளிகளுக்கு கலெக்டர், தலைமை கொறடா நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் 65-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கமாக கூட்டுறவு கொடியினை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஏற்றி வைத்தார். திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான உமாமகேஸ்வரி கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் அதனை திரும்பக்கூறி உறுதிமொழியை எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர் சாந்தா பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், 2018-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 2017-18-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பெரம்பலூர், வெண்பாவூர், அரும்பாவூர், கல்பாடி, புதுவேட்டக்குடி, புஜங்கராயநல்லூர், சிறுகுடல், சாத்தனுர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வாயிலாக விவசாய நகைக்கடன் மற்றும் பயிர்க் கடன் நேரடிக் கடன் மற்றும் 25 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 65-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளையும், கூட்டுறவு சங்கங்கள் பற்றி பள்ளி அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கடனுதவிகளுக்கான காசோலைகளையும், 110 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் பயிர் கடனுதவிக்கான காசோலைகளையும், 40 பயனாளிகளுக்கு மத்திய காலக்கடனாக ரூ.36 லட்சமும், 99 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரம் கடனுதவிக்கான காசோலைகள் என மொத்தம் ரூ.1,622 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட அங்காடி கட்டிடங்களை தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார். 

Next Story