பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வணிகர்கள் முன்வர வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்


பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வணிகர்கள் முன்வர வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:15 AM IST (Updated: 21 Nov 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வணிகர்கள் முன்வர வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

 பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன. எனவே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் செல்லுதல் தடைபடுகிறது. பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவை எளிதில் மக்குவதில்லை.

பிளாஸ்டிக் கழிவுகளில் தூக்கி எறியப்படும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கழிவுடன் சேர்த்து உண்ணும் விலங்குகள் செத்து போகின்றன. குப்பைகளுடன் சேர்த்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவு மேலாண்மைக்கு சவாலாக உள்ளது. எரியூட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சுவாயுக்கள் மனிதனுக்கு சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உணவு பொருட்கள் என்று கருதி உண்ணும் நீர் வாழ் உயிரினங்களின் ஜீரண குழாய்களில் சிக்குவதால் உயிரினங்கள் இறந்து விடுகின்றன. சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தும் போது உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. விளைநிலங்களில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளால் மழை நீரானது ஊடுருவி செல்ல இயலாமல் நிலத்தடி நீரின் அளவு குறைந்து குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயத்திற்கு நீர் இல்லாத நிலை ஏற்படுகிறது.

எனவே வணிகர்கள் துணிப்பைகளை அதிகளவில் சந்தைப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. விஜயகுமார், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொண்டு நிறுவன ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story