தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 8:16 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தாராபுரம்,

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், குடிநீர் பணியாளர்கள் என அனைவருக்கும் அரசு வழங்கிய ஊதிய உயர்வையும், நிலுவை தொகையையும், அதிகாரிகள் வழங்காததை கண்டித்து, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி பணியாளர்கள் கூறியதாவது:–

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன. 150–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு, மாத ஊதியமாக சுமார் ரூ.2,500 வரை வழங்கப்பட்டுவந்தது. ஊதிய உயர்வு கோரியதில் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையால், ஊதியம் உயர்த்தப்பட்டது.

மேலும் அதன் நிலுவைத் தொகையும் வழங்க அரசு உத்தரவிட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான தொகையும், நிலுவைத் தொகையும் கணக்கிட்டு மொத்தமாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளில், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுத் தொகையும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.

இது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சி துணை இயக்குனர் என அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தோம். அதையடுத்து உடனடியாக ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுத் தொகையையும், நிலுவைத் தொகையையும் வழங்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை இங்குள்ள அதிகாரிகள் வழங்கவில்லை.

இதனால் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் துப்புரவு பணியாளர்களை 4 மணி நேர வேலைக்காக பணி நியமனம் செய்து, அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 மட்டுமே ஊதியமாக வழங்குகிறார்கள். இந்த நிலையில் தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், துப்புரவு பணியாளர்களை, 100 ரூபாய் ஊதியத்திற்கு 8 மணி நேரம் கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். அதிகாரிகளின் இதுபோன்ற அராஜகப்போக்கை கண்டித்தும், 7–வது ஊதியக்குழு பரிந்துரையின் படி ஊதிய உயர்வு தொகை மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக்கோரியும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம் என்று கூறினார்கள்.

இது பற்றிய தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் வருகின்ற 23–ந்தேதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், ஊதிய உயர்வு தொகை மற்றும் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story