கோவை அரசு ஆஸ்பத்திரியில்: பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் சாவு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
தமிழகத்தில் தற்போது பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கோவை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் பலர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், பலர் இறந்துள்ளனர். இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் 2 பெண்கள் இறந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி வீரம்மாள் (50). இவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வீரம்மாள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்ததுடன், அவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
திருப்பூரை சேர்ந்த வடிவேல்ராஜன் என்பவரின் மனைவி பேபி (வயது 22). இவருக்கு சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் பேபி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் பேபி வசித்து வந்த திருப்பூர் பகுதியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் ஆகியவற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று வரை பன்றி காய்ச்சலுக்கு 44 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 54 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதுடன், அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story