நிவாரண பணிகள் நடைபெறவில்லை என புகார் ஒரத்தநாட்டில் 3-வது நாளாக சாலை மறியல்


நிவாரண பணிகள் நடைபெறவில்லை என புகார் ஒரத்தநாட்டில் 3-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 21 Nov 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் உள்ளிட்ட நிவாரண பணிகள் சரிவர முழுவீச்சில் நடைபெறவில்லை எனக்கூறி ஒரத்தநாடு பகுதியில் நேற்று 3-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு,

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தென்னை, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் சாய்ந்தன. பெரும்பாலான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஜெனரேட்டர் தட்டுப்பாடு காரணமாக ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை எனக்கூறி நேற்று ஒரத்தநாடு பகுதியில் 3-வது நாளாக பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வன்னிப்பட்டு, நெய்வாசல், ஆதனக்கோட்டை ஆகிய ஊர்களில் பொதுமக்கள் காலிக்குடங்களை சாலையின் குறுக்கே வைத்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story