பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது


பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 20 Nov 2018 10:15 PM GMT (Updated: 20 Nov 2018 9:17 PM GMT)

பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி கூடுகிறது.

பெங்களூரு, 

பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி கூடுகிறது. 10 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10-ந் தேதி கூடுகிறது

வடகர்நாடக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும் ஆண்டுக்கு ஒருமுறை பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவில்(சட்டசபை கட்டிடம்) கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி மதியம் 12.15 மணியளவில் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதாவது, 15-ந் தேதி(சனிக்கிழமை), 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர்த்து 10 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை கூடுவதால் பெலகாவி சுவர்ணசவுதாவில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சபாநாயகர் ஆலோசனை

முன்னதாக நேற்று முன்தினம் சபாநாயகர் ரமேஷ்குமார், பெலகாவி சுவர்ணசவுதாவுக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெலகாவி மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அரசு அதிகாரிகளுடனும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆலோசனை நடத்தினார். பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் பெங்களூரு விதானசவுதாவில் உள்ள சில முக்கிய அரசு துறைகள், பெலகாவிக்கு தற்காலிகமாக மாற்றப்பட உள்ளன.

இதற்கிடையில், சுவர்ணசவுதாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரம், கரும்பு விவசாயிகள் போராட்டம், வடகர்நாடக மாவட்டங்களை கூட்டணி அரசு புறக்கணித்து வருவது தொடர்பாக பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சியான பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க முதல்-மந்திரி குமாரசாமி தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story