ராசிபுரம் அருகே லாரிகள் மோதல்; டிரைவர், கிளனர் பலி


ராசிபுரம் அருகே லாரிகள் மோதல்; டிரைவர், கிளனர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2018 4:30 AM IST (Updated: 21 Nov 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர், கிளனர் பலியாகினர்.

ராசிபுரம்,

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, பஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வடிவேல் (வயது24). மினி லாரி டிரைவர். மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (22). கிளனர். இவர்கள் 2 பேரும் பாலக்கோட்டை சேர்ந்த ஜெயபால் என்பவருடைய மினி லாரியில் டிரைவர், கிளனராக இருந்து வந்தனர். இவர்கள் ஓசூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றனர்.

நாகர்கோவில், வடசேரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகளை இறக்கி விட்டு அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகலூர் கேட் அருகே சாலையோரம் மரலோடுடன் நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதியது.

இதில் மினி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதன் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் வடிவேல், கிளனர் சந்தோஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் நின்றிருந்த லாரியின் டிரைவர் முருகையாவும்(56) காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கணேசன்(புதுச்சத்திரம்), செல்லமுத்து (ராசிபுரம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வடிவேல், சந்தோஷ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த முருகையா ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த டிரைவர் வடிவேலுக்கு மாலா (24) என்ற மனைவியும், கிரினித் (1½) என்ற மகனும் உள்ளனர். கிளனர் சந்தோசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மினி லாரியை கிளனர் சந்தோஷ் ஓட்டி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story