மாவட்டத்தில் 40 பள்ளிகளுக்கு தூய்மை விருது கலெக்டர் மலர்விழி வழங்கினார்


மாவட்டத்தில் 40 பள்ளிகளுக்கு தூய்மை விருது கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 9:49 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் தூய்மை பராமரிப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட 40 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

தர்மபுரி,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் பராமரித்தல், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள், பழவகை மற்றும் மூலிகை வகை மரங்களை வளர்த்தல் ஆகிய பணிகளும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பள்ளிகள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2018-ம் ஆண்டில் தூய்மைப்பள்ளிக்கான விருதை பெற மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என 35 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 4 தனியார் பள்ளிகள் என 40 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட எர்ரப்பட்டி மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளியும் அடங்கும்.

தூய்மைப்பள்ளிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு விருது பெற்ற 40 பள்ளிகளுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். தூய்மை பாரதம் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லா கான், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) துர்காமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story