ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
ராமநகர் அருகே ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
பெங்களூரு,
ராமநகர் அருகே ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். போலீஸ் ஏட்டுவை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் கொலை
ராமநகர் மாவட்டம் கனகபுரா டவுனில் வசித்து வந்தவர் ராஜகோபால். ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர். இவர், அக்கட்சியில் கர்நாடக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். கடந்த 12-ந் தேதி கனகபுரா டவுன் பழைய போலீஸ் நிலைய ரோட்டில் உள்ள டீக்கடையில் ராஜகோபால் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை ஆயுதங்களால் தாக்கினர். மேலும் கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகபுரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேட தொடங்கினர்.
ஏட்டு மீது தாக்குதல்
போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் பற்றி துப்பு கிடைத்தது. மேலும் கொலையாளிகள் சாத்தனூர் அருகே உள்ள பைப்லைன் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று அதிகாலையில் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராம் தலைமையிலான போலீசார் பைப்லைன் பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அங்கு இருந்த 3 பேர் ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இந்த வேளையில் அவர்களை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கோவிந்தப்பா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச்சூடு
இதையடுத்து சரண் அடையும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லேஷ் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் சரண் அடையாமல் தொடர்ந்து ஓடியதோடு, போலீசாரை தாக்க முயன்றனர். இதனால் இன்ஸ்பெக்டர் மல்லேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராம் ஆகியோர் தங்களின் துப்பாக்கிகளை எடுத்து அந்த நபர்களை நோக்கி சுட்டனர்.
இதில், 2 குண்டுகள் 2 பேரின் கால்களிலும் பாய்ந்தன. இதனால் அவர்கள் சுருண்டு கீழே விழுந்தனர். இன்னொருவர் தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து குண்டுகாயமடைந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் கனகபுரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தாக்குதலில் காயமடைந்த போலீஸ் ஏட்டு கோவிந்தப்பாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மல்லேஷ் கூறுகையில், ‘ராஜகோபால் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளோம். விசாரணையில் அவர்கள் கனகபுரா டவுனை சேர்ந்த ராமு(வயது 21), தீபக்(28) என்பது தெரியவந்துள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளியான கவுசிக் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தீவிர நடவடிக்ைக எடுத்து வருகிறோம்’ என்றார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story