தாதரில் தனியார் வாடகை கார் டிரைவர்கள் திடீர் ரெயில் மறியல் போராட்டம் 25 பேர் கைது


தாதரில் தனியார் வாடகை கார் டிரைவர்கள் திடீர் ரெயில் மறியல் போராட்டம் 25 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 11:30 PM GMT (Updated: 20 Nov 2018 10:32 PM GMT)

தாதரில் உபேர், ஓலா வாடகை கார் டிரைவர்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

தாதரில் உபேர், ஓலா வாடகை கார் டிரைவர்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாடகை கார் டிரைவர்கள்

மும்பையில் உபேர், ஓலா ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு வாடகை கார் ஓட்டி வரும் டிரைவர்கள் வாடகையை அதிகரிக்க வேண்டும், தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

நேற்றுமுன்தினம் அவர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களது பேரணியை தடுத்து நிறுத்தினார்கள்.

திடீர் ரெயில் மறியல்

இந்தநிலையில், அவர்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார்கள். அவர் இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை தாதர் ரெயில் நிலையம் முன்பு உபேர், ஓலா வாடகை கார் டிரைவர்கள் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அப்போது, 2-ம் எண் பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்த சர்ச்கேட் செல்லும் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 25 பேரை கைது செய்தனர்.

வாடகை கார் டிரைவர்களின் திடீர் ரெயில் மறியல் காரணமாக சிறிது நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story