புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சாராயம் கடத்திய வாலிபர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் வேலு(வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் கிரி(25). இருவரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூர் முதுநகர் வழியாக மணவெளி நோக்கி சென்றனர்.
அப்போது செல்லங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் முதுநகர் போலீஸ் ஏட்டு கல்ணாயசுந்தரம் என்பவர் அங்குள்ள வெள்ளிபிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த வழியாக வந்த வேலு, போலீஸ் ஏட்டுவை பார்த்தவுடன், பதற்றத்துடன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் கீழே விழுந்தனர். இந்த நிலையில் வேலு, கிரி ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் சந்தேகமடைந்த கல்யாணசுந்தரம் அவர்களை பிடிக்க முற்பட்டார். இந்த சூழ்நிலையில் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வரும் ராஜசேகர் என்பவரும் அங்கு வந்தார். நடந்த சம்பவத்தை பார்த்த அவர் கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து அவர்களை துரத்தி சென்றார். இறுதியாக வேலு மட்டும் சிக்கினார். தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்துபார்த்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் 150 லிட்டர் இருந்தது. இதன் மூலம் சாராயம் கடத்தி வரும் வழியில் போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலுவை கைது செய்தனர். 150 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கிரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று திறம்பட செயல்பட்ட போலீஸ் ஏட்டு கல்யாணசுந்தரம் மற்றும் ராஜசேகர் ஆகியோரை பாராட்டினார்.
Related Tags :
Next Story