கார்த்திகை தீபத்திருவிழா 8-ம் நாள்: குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா


கார்த்திகை தீபத்திருவிழா 8-ம் நாள்: குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 4:50 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று காலை குதிரை வாகனங்களில் சந்திரசேகரரும், விநாயகரும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் 7-வது நாளான நேற்று முன்தினம் விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர் - உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது.

விழாவின் 8-ம் நாளான நேற்று காலை 11.30 மணி அளவில் குதிரை வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது லேசான சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

முன்னதாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேர் முன்பாக நின்று நன்றி தெரிவித்தார்.

மாலை 4.30 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. பிச்சாண்டவர் மாடவீதியில் உலா வந்தபோது திரளான பொதுமக்கள், வியாபாரிகள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். பிச்சாண்டவர் உற்சவத்தின் போது உண்டியலில் காணிக்கை செலுத்தினால் வியாபாரம் விருத்தியாகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பிச்சாண்டவர் மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் வந்ததும், வாணவேடிக்கை நடைபெற்றது.

பிச்சாண்டவர், கோவிலுக்கு சென்ற பிறகு பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் - உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனத்தில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக காடா துணிகள் மாட வீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவு போன்றவை நடைபெற்று வருகிறது.

Next Story