கோவை அரசு ஆஸ்பத்திரியில்: டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலி


கோவை அரசு ஆஸ்பத்திரியில்: டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2018 3:00 AM IST (Updated: 21 Nov 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோவை,

கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சலுக்கு 64 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய ஒரு வயது குழந்தை மித்ரா. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் மணிகண்டன் தனது குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு குழந்தையின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை சிறப்பு வார்டில் வைத்து 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் குழந்தை மித்ரா பரிதாபமாக இறந்தது.

கோவை கவுண்டம்பாளையம் பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவருடைய மனைவி நாகமணி (வயது 47). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சலின் பாதிப்பு குறையவில்லை.

இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த வாரம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பல்வேறு கட்ட சோதனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் என மொத்தம் 108 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story