திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா: பரணி, மகா தீப தரிசனத்திற்கு 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கு 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் நேற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ‘திருவண்ணாமலை மாவட்ட சிறப்புகள்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் வெளியிட்டு விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர் மகா தீபத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரினை இணைக்கும் 9 சாலைகளிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் உட்பட 14 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 23 ஆயிரத்து 600 கார்கள் நிறுத்தும் வகையில் 77 கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறை மூலமாக 8 ஆயிரத்து 971 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 27 தீயணைப்பு வாகனங்கள், 410 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
கோவிலுக்கு வெளியே 113 இடங்களிலும், உள்ளே 103 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையில் 375 இடங்களில் தற்காலிக குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குவதற்கு 7 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரணி தீபத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன டிக்கெட் இணையதளம் மூலமாக மட்டும் 1,600 டிக்கெட்டுகள் ரூ.500 மற்றும் ரூ.600 கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக துணிப்பை கொண்டு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 6 தங்க நாணயங்கள் மற்றும் 72 வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் அளிக்கப்படும்.
கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு மகா தீபத்தன்று 2,500 பக்தர்களுக்கு மட்டும் மலை ஏறுவதற்காக அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story