கண்ணீரும், கம்பலையுமாக பரிதவிக்கும் மக்கள்: காவிரி டெல்டாவின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிய ‘கஜா’ புயல்


கண்ணீரும், கம்பலையுமாக பரிதவிக்கும் மக்கள்: காவிரி டெல்டாவின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிய ‘கஜா’ புயல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-22T00:13:24+05:30)

காவிரி டெல்டாவின் வாழ்வாதாரத்தை ‘கஜா’ புயல் வாரி சுருட்டி தன்வசம் எடுத்து சென்றதால், கண்ணீரும், கம்பலையுமாக மக்கள் பரிதவிக்கிறார்கள். விவசாயிகளிடம் இருந்த தென்னந்தோப்பு களை பறித்த புயல், மீனவர்களிடம் இருந்து வலையை பிடுங்கி சென்றிருக்கிறது.

தஞ்சாவூர்,

2018-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி நள்ளிரவை காவிரி டெல்டா மக்கள் அவ்வளவு எளிதாக இனி மறந்து விட மாட்டார்கள். அன்று வங்கக்கடலை கடந்து வந்த ‘கஜா’ புயலின் கோர கரங்களின் பரிசம், காவிரி ஆற்றங்கரை மாவட்டங்கள் மீது பட்டதுமே, பல மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. படகுகள் பறக்க தொடங்கி விட்டன. தலை நிமிர்ந்து நின்ற பயிர்கள் அனைத்தும் தலை சாய்ந்து விட்டன. வீடுகள் கூரைகளை இழக்க தொடங்கி விட்டன. மக்கள் எங்கு செல்வது? என விழிபிதுங்கி நிற்க தொடங்கி விட்டார்கள்.

ஓட்டு வீடுகளில், வானத்து நிலவை ரசிப்பதற்காக, சூரிய ஒளி கரங்கள் தங்கள் மீது விழுவதற்காக கூரையின் ஒரு இடத்தில் மட்டும் கண்ணாடியை வைத்திருப்பார்கள். அந்த கண்ணாடியுடன், ஓடுகளையும் அடித்து விரட்டிய ‘கஜா’ புயல், வீடு மொத்தத்தையும் வானம் பார்த்த பூமியாக மாற்றி விட்டது. கீற்று கூரைகளால் ஆன வீடுகளில் இருந்து ஒரு மூங்கில் குச்சியை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் புயல் காற்று 15-ந் தேதி நள்ளிரவு வீச தொடங்கி, விடிந்த பிறகும் பல மணி நேரம் வீசியது. நள்ளிரவு கரையை கடந்த புயலால் டெல்டா மாவட்ட மக்கள் தூக்கம் இல்லாமல் கண் விழித்தபடி, புயல் காற்று எப்போது நிற்கும்? என காத்திருந்தனர்.

டெல்டா மக்கள் அன்று தொலைத்த தூக்கம் இன்று வரை கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்குமா? என்ற ஏக்கம் அவர்களின் கண்களில் தெரிகிறது. வீடுகள் இல்லாமல் எங்கே தூங்குவது? என்ற நிலைமைக்கு ‘கஜா’ புயல் மக்களை இழுத்து வந்திருக்கிறது.

உயிரிழப்புகள் ஏராளமாக இருந்திருந்தால் கூட இவ்வளவு சோகம் இருந்திருக்குமா? என்பது கேள்விக் குறியே.

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், தென்னை மரங்களை தென்னம் “பிள்ளைகள்” என்றே அழைப்பார்கள். அந்த அளவுக்கு தென்னை மரங்கள் மீது மக்கள் பாசம் வைத்திருந்தனர். குழந்தைகளை படிக்க வைப்பதில் இருந்து திருமணம் செய்து வைப்பது வரை அத்தனை தேவைகளையும் தென்னை மரங்கள்தான் பூர்த்தி செய்து வந்தன.

ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் அனைத்தையும் ‘கஜா’ புயல் சாய்த்து விட்டதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக அழிந்து விட்டது. மா, பலா, வாழை என்ற முக்கனி மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. அடர்ந்து வளர்ந்து நிழல் பாங்காக காட்சி அளித்த தென்னந்தோப்புகள் காணாமல் போய் விட்டன. கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை தோப்புகள் பழக்குலைகளுடன் உருக்குலைந்து கிடக்கின்றன. வெற்றிலை கொடிகள், வெற்று கொடிகளாக தோற்றம் அளிக்கின்றன.

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணை 4 முறை நிரம்பி தஞ்சை, நாகை, திருவாரூரில் உள்ள காவிரியும், அதன் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பொங்கி வந்தது. கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. அங்கு சம்பா பயிரை விவசாயிகளால் சாகுபடி செய்ய இயலவில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் சம்பா பயிர் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வந்தது.

பயிர்கள் கதிர் வர தொடங்கி இருந்த நிலையில் ‘கஜா’ புயல் ஓங்கி அடித்ததில் அறுவடைக்கு முன்பாகவே நெல் மணிகள் வயலில் சிதறி விட்டன.

தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களின் பிரதான தொழிலாக இருந்த மீன்பிடி தொழிலை புயல் முடக்கி விட்டது. இனி கடல் சீற்றம் இல்லை என்றாலும். மீனவர்களால் கடலுக்கு செல்ல முடியாது. காரணம், இதுவரை இலங்கையில் இருந்து வந்த சில மனிதர்கள் மீனவர்களை படாதபாடு படுத்தினர். இப்போது இயற்கை, மீனவர்களை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு எனப்படும் சிறிய வகை படகுகள் அனைத்தும் காற்றில் பறந்ததை பார்த்து மீனவர்கள் கண்ணீர் வடித்தனர். மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் எனப்படும் பெரிய படகுகள் ஒன்றோடொன்று மோதி சிதிலம் அடைந்தன.

காரைக்காலில் பல விசைப்படகுகள் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டன. அதிராம்பட்டினம் பகுதி கடலோர கிராமங்களில் மீனவர்கள் புயலில் அடித்து செல்லப்பட்ட மீன்பிடி வலைகள் எங்கே கிடக்கின்றன? என்பதை நேற்று கூட தேடினார்கள்.

இதை பார்க்கும்போது நம்மை அறியாமலே நமது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. நாகை, வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் படகுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டதாலும், வலைகள் காணாமல் போய் விட்டதாலும் இனி தங்களால் கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியாதோ? என்ற கவலையில் மீனவர்கள் உள்ளனர்.

‘கஜா’ புயலால் டெல்டா பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்கள் சூறையாடப்பட்டன. டெல்டா கிராமங்களில் 15-ந் தேதி மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று 7-வது நாளாக கிராமங்களில் மின்சாரம் இல்லை. இதனால் டெல்டா 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்கு சென்றிருக்கிறது. மின் மோட்டார்களால் தற்போது பலன் இல்லாததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு டெல்டாவே தாக பூமியாகி விட்டது.

தபால் துறையின் ‘தந்தி’ சேவை பழையது என கூறி அரசாங்கம் நிறுத்தி விட்டது. ஆகையால் செல்போன்களை கிராம மக்கள் வாங்கி குவித்தார்கள். ஆனால் புயல் அவசரத்துக்கு ஒரு செல்போனும் தொடர்பு எல்லைக்கு உள்ளே இல்லை. காரணம், இரும்பு செல்போன் கோபுரங்கள் அனைத்தையும் கஜா புயல் துரும்பென கருதி சுருட்டி மடக்கி விட்டது.

டெல்டா மக்களின் அத்தனை உடைமைகளையும் வாரி சுருட்டிய புயல், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி சான்றிதழ்களையாவது விட்டு சென்றிருக்கலாம். புயலுடன் கொட்டி தீர்த்த பேய் மழை, கல்வி சான்றிதழ்கள், புத்தகங்களை சேதப்படுத்தி, இனி எதை படிப்பது என நினைக்க வைத்து விட்டது. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களும் கிழிந்து கிடக்கின்றன. நிவாரண தொகைக்கு இந்த ஆவணங்களை கேட்பார்களே, என்று வருத்தத்துடன் பலர் புலம்பி வருகிறார்கள்.

வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் இன்று(வியாழக்கிழமை) புயல் நிவாரண முகாம்களில் 8-வது நாளாக வாடி வதங்குகிறார்கள். யானை பசிக்கு சோளப்பொரி போல முகாம்களில் கிடைக்கும் உணவை தங்களுக்குள் பகிர்ந்து சாப்பிட்டு வருகிறார்கள்.

டெல்டாவில் பொதுவாக மழை கொண்டாடப்படும். கடந்த 3 நாட்களாக பெய்த மழையை எந்த மக்களும் கொண்டாடவில்லை. காரணம், மழை சீரமைப்பு பணிகளை தாமதப்படுத்தி வருகிறது.

கூரை வீடுகளின் ஓட்டை உடைசல்களை விளம்பர பேனர்கள், தார்ப்பாய்களால் அடைத்து கொண்டிருந்தவர்களை மழை மேலும் சிரமப்படுத்தி வருகிறது. மின்கம்பங்களை புதிதாக நிறுவ விடாமல் செய்து வருகிறது.

மின்சாரம், குடிநீர், உணவுக்கு போராடும் நிலைக்கு டெல்டா மக்களை கொண்டு வந்து விட்ட புயல், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று ஏங்க வைத்து விட்டது. இன்றாவது மின்சாரம் கிடைக்குமா? குடிநீர் வருமா? என ஒவ்வொரு நாளும் மக்கள் அதிகாரிகளை கேட்கிறார்கள்.

இனி இதை விட துயரம் என்று சொல்ல எதுவும் இல்லை என நினைக்க வைத்து விட்டது புயல். டெல்டாவில் வீடுகளை இழந்து கண்ணீரும், கம்பலையுமாக பரிதவிக்கும் மக்கள், மாற்றுத்துணி இல்லாமல் பயணிகள் நிழலகங்களில் குடும்பம், குடும்பமாக வசித்து வருகிறார்கள். நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்கள் வீடு திரும்பினாலும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழி? என்பது அவர்களை பொறுத்த வரையில் கேள்விக்குறிதான்.

Next Story