திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 21 Nov 2018 11:00 PM GMT (Updated: 21 Nov 2018 6:57 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், போக்குவரத்துறை ஆணையர் சமயமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கஜா புயலினால் பாதிக்கபட்டவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் நகர பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டு, நகர பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். கிராம பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி கலெக்டர் முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story