இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 7:30 PM GMT)

கொள்ளிடம் அருகே கீழமாத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை அகற்றி, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீழமாத்தூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு ரேஷன் கடையில் கீழமாத்தூர், குமாரக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 800 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த ரேஷன் கடை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கட்டிடத்தின் மேற்கூரையில் பல இடங்களில் ஓடுகள் இல்லை. இதனால் மழை பெய்யும்போது கடை ஊழியர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைந்து வீணாகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் தான் ஊழியர்களும் வேலை பார்க்க வேண்டி உள்ளது.

இடிந்து விழும் நிலையில் கடை இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் கிராம மக்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் பழமையான ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த ரேஷன் கடையை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story