மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் தகராறு: அண்ணன்-தங்கைக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது


மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் தகராறு: அண்ணன்-தங்கைக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Nov 2018 3:45 AM IST (Updated: 22 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்-தங்கைக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே வழுவூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (53), விவசாய கூலித்தொழிலாளி. செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டன் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி தமிழரசி (51). இவர் கணேசனின் சகோதரி ஆவார். கணேசன் குடும்பத்துக்கும், பாஸ்கரன் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழரசி, அவரது சகோதரர் கணேசன் வீட்டுக்கு சென்றார். சம்பவத்தன்று பாஸ்கரன் வீட்டு வாசலில் அவரது பேரக்குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகள் கற்களை வீசி விளையாடியபோது, அந்த கற்கள் கணேசன் மீது விழுந்ததாக தெரிகிறது. இதனால் கணேசனுக்கும், பாஸ்கரனுக்கும் தகராறு ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் தனது கையில் வைத்து இருந்த கத்தியால் கணேசனை குத்தினார். இதை தடுக்க வந்த தமிழரசிக்கும் கத்திக்குத்து விழுந்தது.

கைது

இதில் படுகாயமடைந்த கணேசன், தமிழரசி ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story