சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தர்மபுரி பெண் பலி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தர்மபுரியை சேர்ந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி பாரதி(வயது 30). இவர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாக இறந்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூரை சேர்ந்தவர் வையாபுரி(82). தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவரான இவர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அரசு ஆஸ்பத்திரியில் 11 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடனும், 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story