வளவனூரில் விபத்து: பஸ் மோதியதில் புதுவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு


வளவனூரில் விபத்து: பஸ் மோதியதில் புதுவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 22 Nov 2018 5:15 AM IST (Updated: 22 Nov 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

வளவனூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் புதுவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வளவனூர்,

புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க சென்ற போது நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

புதுச்சேரி நோணாங்குப்பம் தாமரைக்குள தெருவை சேர்ந்தவர்கள் அன்பழகன் மகன் சதீஷ் (வயது 21), குணசேகரன் மகன் செந்தில்வேலன் (20). இவர்களில் சதீஷ் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். செந்தில்வேலன் புதுச்சேரி வேல்ராம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்களான இவர்கள் இருவரும் புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காக, நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை செந்தில் வேலன் ஓட்டினார்.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மதியம் 2.50 மணி அளவில் வரும்போது, முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக செந்தில்வேலன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சதீஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செந்தில்வேலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செந்தில்வேலனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்வேலன் இறந்தார்.

விபத்து குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க சென்ற போது அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story