புதுவை புறநகர் பகுதியில் பரவலாக மழை; குடிசை வீடு இடிந்து சேதம்


புதுவை புறநகர் பகுதியில் பரவலாக மழை; குடிசை வீடு இடிந்து சேதம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:15 PM GMT (Updated: 21 Nov 2018 7:42 PM GMT)

புதுவை புறநகர் பகுதியில் பரவலாக பெய்த மழையால் குடிசை வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பாகூர்,

வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 18–ந்தேதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு உள்ளது. அது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி புதுவை மாநிலத்தின் புறநகர் பகுதிகளான பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, திருவண்டார்கோவில், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் முதல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழை நேற்றும் தொடர்ந்தது. காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. பகலில் சாரல் மழையாகவும், அவ்வப்போது பெரிய அளவிலும் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள குடிசை வீடுகளின் மண் சுவர்கள் வலுவிழந்து வருகிறது. பூமி குளிர்ந்து, ஈரக்காற்று வீசுவதால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். அடைமழையால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

இந்த தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏம்பலம் தொகுதி கந்தன் பேட் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குடிசை வீட்டின் மண் சுவர் நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. மழை பாதிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, மின்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாகூர் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் கஜா புயலின்போது பெய்த மழையால் 12 ஏரிகள் நிரம்பின. மற்ற ஏரிகள் தற்போது பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருமாம்பாக்கம் ஏரி ஏற்கனவே நிரம்பிய நிலையில், தற்போது அங்குள்ள படகு குழாமை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இதனால் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஏரிகளின் நிலவரங்களை பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story