காரைக்கால் மக்களுக்கு புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்ட மக்களுக்கு புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக மீனவர் தினம் இன்று (நேற்று) கொண்டாடப்படுகிறது. இதற்காக மீனவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி அரசு சார்பில் மீனவர் தின விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் மீனவர் தின விழாவை கொண்டாடாமல் மீனவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு சிறு சிறு நலத்திட்ட உதவிகளை கூட வழங்காமல் மீனவ மக்களுக்கு துரோகம் இழைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முதியோர் உதவித்தொகை பெற 1550 பேர் விண்ணப்பித்திருந்தும் இதுவரை அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. விடுபட்ட மீனவர்களுக்கு இதுவரை மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காமல் அரசு ஏமாற்றி வருகிறது. 2015–16ம் ஆண்டு மீனவர்களிடம் புயல் சேமிப்பு நிதியாக ரூ.900 வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சேர்த்து ரூ.2,700 வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதை தரவில்லை. கடந்த ஆண்டும் புயல் சேமிப்பு நிதிக்கு பணத்தை வசூலித்து தரவில்லை.
கஜா புயலால் காரைக்கால் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1500 படகுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி வருகிறோம். முதல்–அமைச்சர், அமைச்சர்களும் கண்துடைப்புக்காக காரைக்கால் சென்று ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் இதுவரை சேதமதிப்பு கணக்கிடப்படவில்லை. புதுவையில் சிறிய வாய்க்கால்களைகூட ஆய்வு செய்து வரும் கவர்னர் காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூட கூறவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முதல்–அமைச்சர் நாராயணசாமி புயலால் பாதிக்கப்பட்ட காரைக்காலுக்கு ரூ.187 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுள்ளார். ஆனால் மக்களுக்கு ரூ.4கோடியே 95 லட்சம் அளவிற்கு மட்டுமே நிவாரண தொகை அறிவித்துள்ளார். காரைக்காலில் சிவப்புநிற ரேஷன்கார்டு உள்ள குடும்பத்தினருக்கு புயல் நிவாரணமாக தலா ரூ.7,500 வழங்க வேண்டும், முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும், பாதி சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். எனவே முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்த நிவாரண நிதியை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழக கவர்னர் புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி வருகின்றனர். கன மழையின் காரணமாக ஏற்கனவே மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வருகிற 26–ந் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.