கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட அ.ம.மு.க. பிரமுகர் உடலை மீட்கும் பணி தாமதம் - போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதம்
கோவையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட அ.ம.மு.க. பிரமுகர் உடலை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரியுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
துடியலூர்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் ஜெயவேணு (வயது36). இவர் கோழிக்கடை நடத்தியதோடு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் சாட்சி சொல்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி கோவை வந்தார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாலதீபா கோவை வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ஜெயவேணு கோவை வடமதுரையை சேர்ந்த அவரது உறவினரான ராஜேஷ் (30) என்பவரை சந்தித்து பேசியது தெரியவந்தது. போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. மேலும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்த போது அவர் புனேநகரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அப்போது அவர் ஜெயவேணுவை கொலை செய்து உடலை வரப்பாளையம்-பன்னிமடை ரோட்டில், ஒரு தோட்டத்து கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ராஜேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார், ஜெயவேணுவின் உடலை மீட்பதற்காக சம்பவ இடத்துக்கு சென்றனர். அந்த கிணறு 270 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணறு ஆகும். இந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டதால் நிரம்பி இருந்தது. எனவே கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றி விட்டு உடலை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக அங்குள்ள முட்புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி கோவை வடக்கு தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. பின்னர் கிரேன் மூலம் கிணற்றில் ஆட்கள் இறங்கி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி நேரில் வந்தார். அவரிடம், ஜெயவேணுவின் உறவினர்கள், சம்பவம் நடந்து 50 நாட்கள் ஆகிவிட்டது. காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க போலீசார் தவறி விட்டனர் என்று குற்றம் சாட்டினர்.
மேலும் அவர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு மணி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக் கை எடுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி தனிப்படை போலீசார் புனே சென்று ராஜேசை கைது செய்தனர். அவர் தனது பழைய செல்போனை மாற்றி விட்டு புதிய செல்போனை பயன்படுத்தியதால் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்ய காலதாமதம் ஆகி விட்டது. மேலும் இந்த கொலை வழக்கில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
மேலும் இது குறித்து தாசில்தார் சிவக்குமார் கூறுகையில், தற்போது கிணற்றை சுற்றிலும் உள்ள புதர் கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு உள்ளது. கிணற்றுக்குள் கிரேன் மூலம் கயிறு கட்டி ஆட்கள் இறங்கி, ஜெயவேணுவின் உடலை தேடும் பணி நடந்தது. ஆனால் குப்பைகள் அதிகமாக குவிந்து உள்ளதால் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்றும் பணி நாளை (இன்று)யும் நடைபெறும். அதன் பின்னர் கிணற்றுக்குள் வீசப்பட்ட ஜெயவேணுவின் உடல் மீட்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story