கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின்கட்டணம், நிலவரியை ரத்து செய்ய வேண்டும்


கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின்கட்டணம், நிலவரியை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின்கட்டணம், நிலவரியை ரத்து செய்யவேண்டும் என ம.தி.மு.க. உயர் நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் உயர்நிலை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ‘கஜா’ புயல் காரணமாக காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, ராமநாதபுரம். சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்து இருக்கின்றன. கஜா புயலால் 51 மனித உயிர்கள் பலி ஆகி உள்ளன. அவர்களுக்கு இந்த கூட்டம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் இரவு, பகலாக கண் துஞ்சாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசுத்துறை பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்கு ம.தி.மு.க. பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

*புயலால் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். புயலால் முறிந்து விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடு ரூ.600 என்றும், அதனை வெட்டி அகற்ற ரூ.500 என்றும் ஆக மொத்தம் ரூ.1,100 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருப்பது தென்னையை நம்பி உள்ள குடும்பங்களுக்கு எந்த வகையிலும் ஈடாகாது.

சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே இழப்பீடுத் தொகையை கஜா புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். நெல் ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ. 3 லட்சமும், வழங்க வேண்டும். மக்காச்சோளம், பருத்தி, பயிறு வகைகள் மற்றும் வெற்றிலை, முருங்கை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க வேண்டும். மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களுக்கு ரூ. 30 ஆயிரமும், அவற்றை வெட்டி அகற்றுவதற்கு ஆகும் முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

* கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம், நில வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். குடிசை வீடுகளை இழந்தோருக்கும், கடலோர மீனவர் குடியிருப்புக்களைப் புனரமைக்கவும், கல் வீடுகளில் சேதம் அடைந்தவற்றைப் புதுப்பிக்கவும் அரசு சார்பில் கணக்கீடு செய்து முழுச் செலவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவற்றைச் சீர்படுத்திட தமிழக அரசே முழுமையாக உதவி அளிக்க வேண்டும்.

*இயற்கை சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழகத்தைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து தமிழக அரசு கணக்கீடு செய்து கோரும் புயல் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

* ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகிற 24-ந்தேதி காலை 10 மணி அளவில், வட சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஏகே மணி, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், மாநில மகளிரணி ரொகையா மாலிக், சட்டத்துறை செயலாளர் வக்கீல் வீரபாண்டியன் உள்ளிட்ட உயர் நிலை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story