கல்குவாரிக்கு கண்மாயில் சாலை அமைத்ததை எதிர்த்து மறியல்


கல்குவாரிக்கு கண்மாயில் சாலை அமைத்ததை எதிர்த்து மறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 8:02 PM GMT)

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கல்குவாரிக்கு கண்மாயில் சாலை அமைத்ததை எதிர்த்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கோணப்பனேந்தல் கிராமத்திற்கு அருகே 3 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் 200–க்கும் மேற்பட்ட லாரிகள் புலியூரான் வழியாக வந்து சென்றன. இதனால் சாலை மோசமானதுடன் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி அந்த வழியாக லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இதனால் தனியார் குவாரி நிறுவனம் கோணப்பனேந்தல் கிராமத்திற்கு ஒட்டியுள்ள கண்மாயில் மண் மேடு அமைத்து நீர் செல்ல முடியாத அளவிற்கு சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நீர்வரத்து தடைபடுவதாகவும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கல்குவாரி நிறுவனத்தாரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் உரிய பதில் அளிக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

 இதனால் ஆத்திரம் அடந்த கோணப்பனெந்தல் கிராமத்தினர் அருப்புக்கோட்டை – திருச்சுழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் சாலை அமைக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களை ஆக்கிரமத்து சாலை அமைப்பதை கண்டு உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story