ஓசூர் அருகே காதல் திருமண தம்பதி ஆணவ கொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை


ஓசூர் அருகே காதல் திருமண தம்பதி ஆணவ கொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 21 Nov 2018 8:05 PM GMT)

ஓசூர் அருகே காதல் திருமண தம்பதி ஆணவ கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளியில் காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, டெல்லி பட்டியலினத்தவருக்கான (தாழ்த்தப்பட்டோர்) தேசிய ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் நேற்று மாலை சூடுகொண்டபள்ளிக்கு வந்தார்.

அங்கு நந்தீஸ் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து நந்தீஸ் குடும்பத்தினரிடம் சுமார் 1 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தினார்.

பின்னர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். நந்தீஸ் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இங்கு வருவதற்கு முன்பாக, கர்நாடக மாநிலம் மண்டியா போலீஸ் சூப்பிரண்டிடம் தொலை பேசியில் பேசினேன்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்துள்ளதாகவும், மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னும் ஓரிரு நாளில் அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

நந்தீஸ் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நிவாரண தொகையில், 50 சதவீத தொகையான 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நாளையே (இன்று) வழங்கப்படும். மீதி தொகை பின்னர் வழங்கப்படும். இந்த கிராமத்தில் 15 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த மக்களுக்கு, ஓசூர் பகுதியில் உள்ள நிறுவனங்களில், வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நந்தீஸ் குடும்பத்திற்கு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கிடைக்க வேண்டிய கூடுதல் சலுகைகளான 5 ஆயிரம் ரூபாய் பென்சன், 3 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் இன்றே வழங்க கேட்டு கொண்டு உள்ளேன். மேலும், அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு படிப்பு செலவு, மற்றும் வீடு அல்லது வீட்டு மனை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில், தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது போன்று, இந்த வழக்கிலும் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

நானும், எங்கள் தேசிய ஆணையமும் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அரியானா மற்றும் கர்நாடக மாநில அரசுகள், கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது, இந்த தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று பரிந்துரை செய்து, ஏற்கனவே தமிழக தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சமூக நல்லெண்ணத்தை ஊக்குவிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நந்தீஸ் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை, குடும்ப பென்சன், வீடு அல்லது வீட்டுமனை கிடைத்து விடும்.

இவ்வாறு முருகன் கூறினார்.

அப்போது அவருடன், மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் பலர் சென்றனர்.

Next Story