நெல்லை அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் கொலை: காதலி தூக்குப்போட்டு தற்கொலை பரபரப்பு தகவல்கள்


நெல்லை அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் கொலை: காதலி தூக்குப்போட்டு தற்கொலை பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 8:26 PM GMT)

நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியரின் காதலி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் இசக்கிசங்கர் (வயது 33). பி.இ. பட்டதாரியான இவர் களக்காட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்ற அவர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கிசங்கர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தளவாய் மகள் சத்தியபாமா (21) என்பவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இசக்கி சங்கரும், தற்கொலை செய்து கொண்ட சத்தியபாமாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இசக்கிசங்கர் கொலை செய்யப்பட்டதை அறிந்த சத்தியபாமா மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

சத்தியபாமா பாபநாசத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். சத்திய பாமாவும், இசக்கிசங்கரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இருவருடைய குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தாலும் அவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் இசக்கி சங்கர் வீட்டில் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இசக்கிசங்கர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சத்தியபாமாவின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் அம்பை போலீசார் நேற்று முன்தினம் சத்தியபாமாவின் வீட்டுக்கு சென்றனர். இந்த கொலை தொடர்பாக சத்தியபாமா, அவருடைய தந்தை தளவாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

தனது காதலன் கொலை செய்யப்பட்டதில் இருந்தே அழுதுகொண்டு சோர்வாக இருந்த சத்தியபாமா, போலீசார் விசாரணை நடத்திய பிறகு மேலும் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியபாமா வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சத்தியபாமாவின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி துடித்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சத்தியபாமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பிரேத அறையில் இசக்கிசங்கர், சத்தியபாமா ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தது. இதனால் இருவரின் உறவினர்களும் அங்கு கூடி நின்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மதியம் 1 மணிக்கு இசக்கிசங்கர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு சத்தியபாமா உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கூட்டுறவு வங்கி ஊழியர் படுகொலை மற்றும் அவருடைய காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளாங்குழி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் அப்பகுதியில் வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story