சபரிமலைக்கு காரில் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


சபரிமலைக்கு காரில் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 21 Nov 2018 8:29 PM GMT)

சபரிமலைக்கு காரில் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் பஸ்சில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

சபரிமலை,

சபரிமலைக்கு காரில் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் பஸ்சில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து நிலக்கல், பம்பை, சபரிமலை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு காரில் புறப்பட்டார்.அவர் நிலக்கல்லுக்கு வந்த போது அவருடன் மேலும் சில வாகனங்களும் வந்தன. உடனே போலீஸ் சூப்பிரண்டு யதீர் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பொன்.ராதாகிருஷ்ணன் வந்த வாகனத்தை மட்டும் அனுமதித்தனர். மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுத்தனர்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் மற்ற வாகனங்களையும் என்னோடு அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த போலீசார், உங்களது காரோடு மற்ற வாகனங்களையும் அனுமதிக்கும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

உடனே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டுடன் காரில் இருந்து இறங்கினார். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் பா.ஜனதா தொண்டர்களும் சென்றனர்.

பம்பையில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சபரிமலை தரிசனத்துக்கு வரும் வாகனங்களை கடந்த சீசனை போன்று பம்பை வரை அனுமதிக்க வேண்டும். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் சபரிமலையில் போலீசாரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது என்றார்.தொடர்ந்து அவர் இருமுடி கட்டுடன் மலை ஏறி சபரிமலைக்கு சென்றார். அங்கு சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story