கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லல்படும் புதுக்கோட்டை மக்கள்


கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லல்படும் புதுக்கோட்டை மக்கள்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 8:34 PM GMT)

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் 6-வது நாளாக புதுக்கோட்டை மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை,

கடந்த 16-ந் தேதி அதிகாலை தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. இந்த புயலுக்கு நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. குறிப்பாக, புயலின் கோரத் தாண்டவத்துக்கு புதுக்கோட்டை மாவட்டம் சின்னா பின்னமாகியது. ஆயிரக்கணக்கான மரங்கள், வாழைகள் அடியோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சரிந்து விழுந்தன. ஏராளமான வீடுகள், மீனவர்களின் விசைப்படகுகள், மீன்பிடி வலைகள், கோழிப்பண்ணைகள் நாசமடைந்தன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அனைத்துத் துறை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், ஊராட்சி, பேரூராட்சிகள் பணியாளர்கள் சார்பில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஊழியர்கள் வந்திருந்து மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளனர்.

6-வது நாளாக தவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக முழுமையாக மின்வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் இருளில் தவித்தனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், இலுப்பூர், கீரனூர், பொன்னமராவதி, ஆலங்குடி, விராலிமலை, மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. அதுவும் விட்டு, விட்டு தான் கிடைத்தது. மின்சாரம் இல்லாமல் ஏராளமான கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கித்தான் கிடக்கின்றன. அவர்களுக்கு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

இதேபோல, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். நகராட்சி லாரிகள், தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தாலும் அந்த தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் 6-வது நாளாக பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் இன்னும் 2 நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் கிடைத்து விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story