குஞ்சப்பனையில்: சாலையில் விளையாடும் லங்கூர் இன குரங்குகள் - கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை


குஞ்சப்பனையில்: சாலையில் விளையாடும் லங்கூர் இன குரங்குகள் - கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 8:58 PM GMT)

குஞ்சப்பனையில் அரிய வகை லங்கூர் இன குரங்குகள் சாலையில் விளையாடுகின்றன. இதனால் கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, காட்டுயானை, புலி, மான், கரடி, சிறுத்தை, வரையாடு, குரைக்கும் மான், மர அணில், லங்கூர் இன குரங்குகள் மற்றும் அரிய வகை பறவைகள் என பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. இதில் சாம்பல் நிற உடலும், கருப்பு நிற முகமும், நீளமான வாலும் கொண்ட அரிய வகை நீலகிரி லங்கூர் இன குரங்குகள் குஞ்சப்பனையில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் லங்கூர் இன குரங்குகள் சாலையோரங்களில் கூட்டமாக நிற்பதுடன் அடிக்கடி சாலையில் விளையாடி வருகின்றன.

இந்த அரிய வகை லங்கூர் இன குரங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். மேலும் அவைகளுக்கு தின்பண்டங்களை கொடுத்து வருகின்றனர். இதேபோல கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மடித்தொரை அருகே உடல் முழுவதும் கருப்பு நிறம் கொண்ட லங்கூர் இன குரங்குகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

லங்கூர் இன குரங்குகள் அரிய வகையை சேர்ந்தது ஆகும். எனவே குஞ்சப்பனை-மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி- ஊட்டி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவைகளின் மீது மோதி விடாமல் கவனமுடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும். மேலும் அவைகளுக்கு தேவையான உணவு இயற்கையாகவே வனப்பகுதியில் இருந்து கிடைத்து விடும் என்பதால், அவைகளின் உணவுப்பழக்கத்தை மாற்றாமல் தடுக்க அந்த குரங்குகளுக்கு தின்பண்டங்களை வழங்குவதை சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் தவிர்க்க வேண்டும். மேலும் அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story