தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்கள், மக்கும்-மறுசுழற்சி குப்பைகளை பிரித்து சேகரிக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்


தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்கள், மக்கும்-மறுசுழற்சி குப்பைகளை பிரித்து சேகரிக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்கள், மக்கும்-மறுசுழற்சி குப்பைகளை பிரித்து சேகரிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மக்கும்-மறுசுழற்சி குப்பைகளை பிரித்து சேகரிக்க வேண்டும் என்று மாநகராட்சிஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அன்றாடம் சேரும் குப்பைகளை வீடுவீடாக சென்று மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை என பிரித்து சேகரித்து வருகிறது.

மக்கும் குப்பைகளை மாநகராட்சியால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நுண்உரமாக்கல் மையம் மூலம் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்த பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், சுற்றுச்சுழல் மாசுபடுதலை தவிர்க்க குப்பைகளை பிரித்து சேகரிக்க வேண்டியது அவசியம் ஆகும். குப்பைகளில் கணிசமான அளவு கடை வீதிகள் மற்றும் வணிகநிறுவனங்களின் மூலம் உற்பத்தியாகிறது.

இதனால் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்து உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் உணவு, காய்கறி கழிவுகள், பழங்கள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாக பச்சை நிற கூடைகளிலும், காகிதம், பிளாஸ்டிக் கவர்கள், அட்டைகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஊதா நிறக் கூடையிலும் பிரித்து தங்கள் வணிக நிறுவனங்களுக்கு வரும் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தெரு ஓரங்களில் குப்பைகளை வீசி எறியாத வகையில் பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது தக்க மேல்நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.



Next Story