கோவில்பட்டி-கயத்தாறில் போலீசார் அதிரடி சோதனை: மது விற்ற அ.தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் கைது


கோவில்பட்டி-கயத்தாறில் போலீசார் அதிரடி சோதனை: மது விற்ற அ.தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, கயத்தாறில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் மது விற்ற அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,567 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி,

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில், மாவட்ட தனிப்பிரிவு போலீசார் நேற்று கோவில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து மார்க்கெட் ரோடு செல்லும் வழியில் பால்பாண்டியன் பேட்டை பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி-கடலையூர் ரோடு பழத்தோட்ட நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 47), கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிரேசன் (62) என்பது தெரிய வந்தது. அந்த 2 பேரையும் கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அவர் களை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1,087 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று கயத்தாறு அருகே குட்டிகுளம் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த கயத்தாறு தெற்கு தெருவை சேர்ந்த வினோபாஜி(33)யை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் கயத்தாறு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 480 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான வினோபாஜி கயத்தாறு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story